மனித சிறுநீரிலிருந்து உரம் தயாரிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சிறுநீரை சேமிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாக்பூர் நகராட்சி சார்பில் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், "நான் சொன்னது போல நடந்தால் வருங்காலத்தில் இந்தியா உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமே இருக்காது. அனைத்து வகையான இயற்கைக் கழிவுகளில் இருந்து எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் சிறுநீரில் நைட்ரஜனும் அம்மோனியம் சல்பேட்டும் அதிகம் உள்ளது. இதன்மூலம் எரிபொருட்களைத் தயாரிக்க முடியும். இத முதல் கட்டமாக விமான நிலையங்களில் சிறுநீரைச் சேமிக்கச் சொல்லி இருக்கிறேன். விவசாயத்துக்காக நாம் இப்போது யூரியாவை இறக்குமதி செய்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடும் சிறுநீரைச் சேமிக்கும் பட்சத்தில், நாம் உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய தேவையே இருக்காது'' என கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது தோட்டத்தில் இந்த முறையை பயன்படுத்தி 25 சதவீதம் மகசூலை அதிகப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.