குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.
இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பதற்கான பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16/07/2022) மாலை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, "பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
ஜெகதீப் தன்கர் யார்? அவரை குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 1951- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். தற்போது இவருக்கு வயது 71. வழக்கறிஞரான இவர், பா.ஜ.க.வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கடந்த 1989- ஆம் ஆண்டு முதன்முறையாக மக்களவைக்கு ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனினும், 1990 முதல் 1991 வரை மட்டுமே மத்திய இணையமைச்சர் பதவியை வகித்துள்ளார்.
பின்னர், 1993- ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முழுமையாக நிறைவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 2019- ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில ஆளுநராக ஜெகதீப் தன்கரை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
தற்போது வரை ஆளுநர் பதவியில் நீடிக்கும் ஜெகதீப் தன்கருக்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வரும் சூழலில், அவரை பா.ஜ.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக அக்கட்சித் தலைமை தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.