மனு குலாடி என்ற இந்திய ஆசிரியைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தனர். அப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொண்டனர். இதில், தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பள்ளிக்குச் சென்ற அவருக்குப் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம், தியானக்கூடம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த டெல்லி அரசுப் பள்ளியைச் சுற்றிப்பார்த்து மெலனியா, அங்குக் கல்வி பயிலும் மாணவர்களிடமும், ஆசிரியைகளிடமும் உரையாற்றினார். இந்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையான மனு குலாடிக்கு வெள்ளை மாளிகையிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மெலனியா வருகையின்போது விழா ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்த மனு குலாடி, 2018 ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பணியைப் பாராட்டும் விதமாக வெள்ளை மாளிகை அனுப்பியுள்ள இந்த பரிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மனு குலாடி.