ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதியை கொடுத்துவிட்டு நிறைவேற்றாமல், வெறுங்கையுடன் ஆந்திராவுக்குள் வர வெட்கமில்லையா என பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என ஏற்கனவே இருந்த காங்கிரஸ் ஆட்சியின்போது தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது ஆனால் அதை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி விசாகப்பட்டினம் வரும்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி அதனை ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "ஆந்திரா மறுசீரமைப்புச் சட்டம் கொண்டுவந்து 59 மாதங்கள் ஆகிவிட்டன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 57 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்கிற பிரதமர் மோடியின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நான் தனிப்பட்ட முறையில் புதுடெல்லிக்கு 29 முறை சென்று பிரதமர் மோடியை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்து, அதனை நிறைவேற்றாமல், வெறுங்கையுடன் நீங்கள் வருவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா. 5 கோடி மக்களின் பிரதிநிதியாய் நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்" என எழுதியுள்ளார். மேலும் இன்று பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.