இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அமைப்பைத் தடை செய்ய வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கீதாராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் “இந்தியாவில் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மத்திய விளையாட்டுத்துறையின் கீழ் அனுமதி பெற்று நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு விளையாட்டுத்துறையின் அனுமதியில்லாமல் பி.சி.சி.ஐ அமைப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்று தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. பிசிசிஐ என்பது தமிழகத்தில் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்திய நட்சத்திர சின்னத்தையே பி.சி.சி.ஐ இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. அதனால், பி.சி.சி.ஐ அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும். மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்று தன்னை அடையாளப்பத்துவதற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ அமைப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.