மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குமான வார்த்தை யுத்தங்கள் தடித்து வருகின்றன.
பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, “திருடர்களும், ரவுடிகளும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்” என ஆவேசப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது. இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என பகீரத பிரயத்தனத்தில் குதித்துள்ளது பாஜக. இதற்காக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரசிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரையும் பாஜகவில் இணைத்து வருகிறார்கள். இதற்காக, அடிக்கடி மேற்கு வங்கத்துக்குப் பயணப்படுகிறார் அமித்ஷா. அண்மையில் கூட திரிணாமுல் காங்கிரசில் வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி, பாஜகவில் இணைந்திருந்தார்.
மேற்கு வங்க அரசியல் குறித்து சமீபத்தில் பேசிய அமித்ஷா, “திரிணாமுல் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் அந்தக் கட்சியில் முதல்வர் மம்தா மட்டுமே இருப்பார்” என்று விளாசியிருந்தார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மட்டுமல்ல, மம்தா பானர்ஜியையும் கோபப்பட வைத்திருக்கிறது. இந்நிலையில், மேற்குவங்கத்தின் அலிபுர்துவாரில் தேர்தல் பொதுக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது திரிணாமுல் காங்கிரஸ்.
கூட்டத்தில் மைக் பிடித்த மம்தா பானர்ஜி, பாஜகவை சரமாரியாக ஒரு பிடி பிடித்திருந்தார். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவுபவர்களையும், அதற்கு காரணமாக இருக்கும் பாஜகவையும் விமர்சித்துப் பேசினார். அவர் பேசும்போது, “அனைத்து திருடர்களும், ரவுடிகளும் பாஜகவில் சேர்கிறார்கள். அவர்கள் எங்களை (திரிணாமுல் காங்கிரஸ்) தோற்கடிப்பார்கள் என பாஜகவினர் கூறுகின்றனர். உங்களால் ஒருபோதும் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க முடியாது. எனக்கு நிறைய புகார்கள் வருகிறது. விசாரித்து வருகிறோம். சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது” என்று ஆவேசப்பட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி.