ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்குப் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இனி முதல்வரான பின்புதான் இந்த சட்டமன்றத்திற்குள் வருவேன் என சபதமிட்டு சந்திரபாபு நாயுடு அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். இதன் பின்னர் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் கண்ணீர் மல்க அவர் பேட்டியளித்தார். அப்போது ஆளுங்கட்சியினர் தனது மனைவியைக் கடுமையான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர், "கடந்த இரண்டரை வருடங்களாக அவமானங்களைத் தாங்கிக் கொண்டு, அமைதியாகவே இருந்தேன். ஆனால் இன்று என் மனைவியைக் கூட குறிவைத்தார்கள். நான் எப்போதும் மரியாதையுடனும் மரியாதைக்காகவும் வாழ்பவன். என்னால் இனி இதைத் தாங்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பில் அழுதது சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.