இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் முழு பயன்பாட்டில் உள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனமும், கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துவருகின்றன. இந்த இரு தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஒரு டோஸ்க்கு 150 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்தது.
இருப்பினும், சீரம் மற்றும் பாரத் பையோடெக் ஆகிய இரு நிறுவனங்களுமே ஒரு டோஸ்க்கு 150 ரூபாய் என்ற கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என தெரிவித்துவந்தன. மேலும், டோஸ்க்கு 150 ரூபாய் அளித்தால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது கடினம் என மத்திய அரசிடம் தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மத்திய அரசு, தடுப்பூசிகளின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, 66 கோடி தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்திருப்பதாகவும், இந்த ஆர்டரில் ஒரு டோஸ் கோவாக்சினை 225 ரூபாய்க்கும், ஒரு டோஸ் கோவிஷீல்டை 215 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கவுள்ளதாக அந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.