மத்திய பிரதேச மாநிலத்தின் வனப்பகுதியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஒரு பெண்ணின் உடலையும், குழந்தையின் உடலையும் கண்ட வனக்காவலர்கள், இதுதொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இருவரின் உடலையும் கைப்பற்றிய காவலர்கள், கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர்.
இந்தநிலையில், பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனை கைதுசெய்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் அந்தப் பெண்ணை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருணம் செய்துகொண்டு மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் ஷுஜல்பூர் பகுதியில் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாத இறுதியில் அந்தப் பெண்ணின் கணவர் வேலை விஷயமாக வெளியூர் செல்லவே, தீபாவளியைக் கொண்டாட அந்தப் பெண் தனது குழந்தையுடன் தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனை தனது கணவரிடம் அந்தப் பெண் கூறாத நிலையில், பெண்ணின் சகோதரி தனது தந்தைக்கும், சகோதரனுக்கும் குழந்தை இறந்த விவரத்தைக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குழந்தையின் உடலை அடக்கம் செய்யலாம் எனக் கூறி அந்த பெண்ணைக் காட்டுப் பகுதிக்குள், அவரது தந்தையும் சகோதரனும் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தங்களது இருசக்கர வாகனத்தைப் பார்த்துக்கொள்ளும்படி பெண்ணின் சகோதரனை நிறுத்திவிட்டு பெண்ணைக் காட்டிற்குள் அழைத்துச் சென்ற தந்தை, அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விசாரணையின்போது, தனது பெண்ணைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்ததாகவும் பெண்ணின் தந்தை கூறியுள்ளார். தற்போது பெண்ணின் தந்தை மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் சகோதரன் மீது கொலை சதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.