
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி, ஆயுத்தமாகி வருகிறார். அதற்காக பல கட்டங்களாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், நேற்று முன் தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை பாஜக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
நான் 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் ஒரு இயக்கத்தைத் தொடங்கலாம். தேவைப்பட்டால், வாக்காளர் பட்டியலைச் சரிசெய்து போலி வாக்காளர்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில், ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைப் பதிவு செய்து பாஜக தேர்தல்களில் வெற்றி பெற்றது.
சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக அறிந்திருக்கிறது. இதனால், ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைக் கொண்டு வந்து வங்காளத்தில் தேர்தல்களில் வெற்றி பெற பா.ஜ.க முயற்சிக்கும். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்த போலி வாக்காளர்களை பா.ஜ.க சேர்க்கிறது என்று உறுதியாக தெரிகிறது. அவர்கள் சேர்த்த போலி வாக்காளர்களை அவர்களது உதவியுடேனே நாம் அடையாளம் காண வேண்டும். மேற்கு வங்கத்தை வெல்ல பா.ஜ.க ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது. டெல்லி தேர்தலில் பா.ஜ.க செய்ததை மேற்கு வங்கத்திலும் செய்ய விடக்கூடாது” என்று தெரிவித்தார்.