
மத்தியப் பிரதேச மாநிலம், சிவபுரி பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தையை, கடந்த 23ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், காணாமல் போய் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில், சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில். 17 வயது சிறுவன் ஒருவன் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
குடிபோதையில் இருந்த அந்த சிறுவன், பாதிக்கப்பட்ட குழந்தையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தலையை சுவரில் பலமுறை தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். சிறுமியின் பிறப்புறுப்பு பகுதிகளில் பல வெட்டுகள், கீறல்கள் மற்றும் கடித்த அடையாளங்கள் இருப்பதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடி வரும் சிறுமியின் பிறப்புறுப்பில் 29 தையல்களும், அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.