குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், குரங்கு காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC - Public Health Emergency of International Concern) அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “குரங்கு அம்மை பரவும் நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவிற்குப் பயணம் செய்த இளம் ஆண் நோயாளி ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
மேலும் நோயாளியின் மாதிரிகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்படுகின்றன. அதே சமயம் குரங்கம்மை பாதிப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.