புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று நடைபெற்ற கரோனோ பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
கரோனா நோய் தொற்றினை தடுக்கும் விதமாக புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. புதுச்சேரியில் கரோனா நோய் தொற்றுக்கு 6 பேர் ஆளான நிலையில், மூன்று பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் குணமடைந்ததாக தெரியவந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்குவது, ஆய்வு செய்வது என மக்களுடன் நெருங்கி பழகுவதால் அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நேற்று சட்டப்பேரவை கூட்ட அரங்கில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன், வைத்திலிங்கம் எம்.பி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என 21 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
அவர்களின் தொண்டையில் இருந்து உமிழ் நீர் மாதிரி எடுக்கப்பட்டு RT-PCR (Real time-polymirst chain reaction) முறையில் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் பொதுமக்கள் 35 பேருக்கும் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியான நிலையில் நேற்று உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட 56 பேருக்கும் கரோனோ தொற்று இல்லை என தெரிய வந்தது.