இந்தியாவில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தமிழகம், கேரளா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு, மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுவை அனுப்புவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகாராஷ்ட்ரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கரோனாவுக்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், "இந்தக் குழுக்கள் மாநிலங்கள் / யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் நெருக்கமாகச் செயல்பட்டு, சமீபத்தில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியும். மேலும் இந்தக் குழு, கரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் நோக்கத்தை முன்னிட்டு எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளில், மாநில/ யூனியன் பிரதேச சுகாதார ஆணையத்தோடு ஒருங்கிணைந்து செயல்படும்" எனத் தெரிவித்துள்ளது.