தனியார் நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் முதன்முறையாக ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசின் இணை செயலாளர்கள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக இணை செயலாளர்கள் பதவியில் மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த பதவியில் தனியார் துறை ஊழியர்களை நியமிப்பதாக மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் முடிவு செய்து அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. 6,077 தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 89 பேரை யுபிஎஸ்சி இறுதி செய்தது. அதில் முதற்கட்டமாக இவர்களில் 9 பேர் ஒப்பந்த முறையில் மத்திய அரசின் இணை செயலாளர்கள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக பிரிவில் அருண் கோயல், பொருளாதார விவகாரங்கள் பிரிவில் ராஜீவ் சக்சீனா, சுற்றுசூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் வாஜ்பாயி ஆகியோர் மிக முக்கியமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.