மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிவடையும் உறுப்பினர்களுக்குப் பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சி, இன்று (09.02.2021) நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. அவரைப் பற்றி பேசியபோது பிரதமர் மோடி, “உயர் பதவி வரும், அதிகாரம் வரும். இவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை குலாம் நபி ஆசாத் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நான் அவரை ஒரு உண்மையான நண்பராக கருதுகிறேன்” எனக் கூறினார். அப்போது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அவரது நா தழுதழுத்தது.
அதேபோல் இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சரும், இந்தியக் குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வலே, "நீங்கள் சபைக்குத் (மாநிலங்களவை) திரும்ப வேண்டும். காங்கிரஸ் உங்களைத் திரும்ப அழைத்து வரவில்லை என்றால், நாங்கள் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த அவைக்கு நீங்கள் தேவை" எனக் கூறினார்.
இதன்பிறகு பேசிய குலாம் நபி அசாத், "பாகிஸ்தானுக்கு ஒருபோதும் செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். பாகிஸ்தானின் சூழ்நிலைகளைப் பற்றி நான் படித்தபோது, ஒரு இந்துஸ்தானி முஸ்லிம் என்பதில் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார். குலாம் நபி அசாத் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.