பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு வழங்கிய நிதிக்கான பத்திரங்களை , அந்த குறிப்பிட்ட கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி நிதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என்று தீர்ப்பு வழங்கி அந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க தலைவர்கள் மிரட்டி பணம் பறித்ததாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்த மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூரில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தேர்தல் பத்திரம் புகார் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூர் திலக் நகர் போலீசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூர் திலக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில், ஜே.பி.நட்டா, கர்நாடகா பா.ஜ.க முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.