பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் கட்சித் தலைவரான சுக்பால் சிங் கைரா எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது கடந்த 2015ஆம் ஆண்டு ஜலாலாபத்தில் போதைப்பொருள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில், இவரோடு 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், போதைப்பொருள் மருந்துகள் மற்றும், மனநோய் பொருள்கள் (NDPS) சட்டத்தின் கீழ் பஞ்சாப் நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இந்த உத்தரவு நடவடிக்கையை எதிர்த்து சுக்பால் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கூடுதல் குற்றவாளியாக அழைக்கப்பட்ட சுக்பால் சிங்குக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளை கடந்த 2017ஆம் ஆண்டு நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. அப்போது ஆம் ஆத்மி கட்சியில் எம்.எல்.ஏவாக இருந்த சுக்பால் சிங், இந்த சம்பவத்தின் பின்னணியில் தனது கட்சிக்காரர்களின் சதி இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன் பின்னர், சுக்பால் சிங் கைரா கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
இந்த நிலையில், சுக்பால் மீது போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்கு தொடர்பாக சுக்பால் சிங் கைரா இல்லத்தில் இன்று காலை காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுக்பால் சிங் கைரா முகப்புத்தகத்தின் மூலம் வீடியோ எடுத்தார். அவர் எடுத்த அந்த வீடியோவில், சுக்பால் சிங் காவல்துறை அதிகாரிகளிடம் கைது செய்யப்படுவதற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சுக்பால் சிங்கை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜாவார்ரிங் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஆம் ஆத்மி அரசை கடுமையாக தாக்கினார். அந்த பதிவில், “சுக்பால் சிங்கின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இது எதிர்க்கட்சிகளை மிரட்டும் முயற்சி. மேலும், முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப ஆம் ஆத்மி அரசின் தந்திர நடவடிக்கை ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.