தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இந்த மாதத்தில் இரண்டு முறை சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்புகளில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதன்பிறகு சரத் பவார், எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கட்சியில், அதன் தலைமையில் அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர்கள் கலந்துகொள்ள மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது.
இருப்பினும் காங்கிரஸ் பங்கேற்காததால், சரத் பவார் மூன்றாவது அணியை அமைக்க முயலுவதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் சரத் பவார் தற்போது மூன்றாவது அணி அமைய இருப்பதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டுமென்றால், அதனை காங்கிரஸை இணைப்பதன் மூலம் மட்டுமே செய்யமுடியும். அதுபோன்ற (காங்கிரஸ் போன்ற) சக்தி எங்களுக்கு தேவை. நான் அந்த கூட்டத்தில் இதையே சொன்னேன்" என தெரிவித்துள்ளார்.