வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவில் இருந்து பரவலாக கனமழை பொழிந்து வருகிறது.
இதற்கிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.