கேரளாவில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது அப்படி அனுமதிக்கப்பட்டால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என தேவஸ்தான போர்டு நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரளாவின் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கக்கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திராசூட், இந்து மல்கோத்ரா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவில் நிர்வாகம் பெண்கள் கோவிலுக்குள் நுழையத் தடை விதிக்க முடியுமா?, இத்தகைய தடை அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகுமா?, பெண்களின் உடற்கூறு அடிப்படையில் பின்பற்றப்படும் இந்த வழக்கம் பாகுபாடு அரசியல் சாசன அமைப்பின் விதிகளை மீறுகிறதா?, இது அவசியமான மத வழக்கமா? 10 வயது குழந்தையையும் 50 வயது பெண்ணையும் சபரிமலையில் அனுமதிக்கும் போது, இளம் பெண்களை அனுமதிப்பதில் என்ன தவறு.
ஒரு குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் மீது தீண்டாமை முறை பின்பற்றப்படுவது ஏன்? சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஒரு கோவிலில் ஆண்களுக்கு வழிபட அனுமதி உண்டு என்றால், பெண்களுக்கும் அனுமதி உண்டு. ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானம். மனிதர்களுக்குள் வேறுபாடு காட்டக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது, மாதவிலக்கு காலங்களில் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என சபரிமலை தேவஸ்தான போர்டு நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.