2019க்குள் அனைத்து கிராமங்களிலும் வை-ஃபை!
2019ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதிலும் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளிலும் வை-ஃபை சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 5.5 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அருணா சுந்தரராஜன், ‘இது மிகப்பெரிய இலக்கு. இந்த வை-ஃபை திட்டத்தை அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினால், இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் கிராமங்களும் பயன்பெறும்’ என தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக ரூ.3,700 கோடி நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு வினாடிக்கு 1 ஜிபி வேகத்தில் செயல்படும் வை-ஃபை இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளன. 100 மெகா பைட்டாக இருக்கும் இந்த வேகத்தை, பாரத் நெட் திட்டத்தின் மூலமாக 10 மடங்கு அதிகமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேகத்தில் 2 விநாடிகளில் ஒரு முழு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்துவிட முடியும். அதேபோல், 40,000 கிராமங்களை இந்த இணைய சேவையுடன் இணைப்பதன் மூலம், 30 கோடியாக உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா வெளியிட்டுள்ள தகவலின் படி, செப்.6ஆம் தேதி முதல் 33,430 கிராம பஞ்சாயத்துகளில் இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 800 இணைப்புகள் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது முந்தைய நிலவரத்தை விட 6 மடங்கு அதிகமாகும்.
- ச.ப.மதிவாணன்