18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் நீதிபதிகள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதாவது சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம், விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் முடிவின் அடிப்படையில், ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதைச் சரி செய்ய 5 நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிடத் தயாராக இருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் இருந்தன. இந்த புகார்கள் குறித்து கவனத்திற்குக் கொண்டு வந்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.