Skip to main content

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

bb

 

தினசரி காலையில் செய்தித்தாள்களை பார்க்கும்போது வணிகம் பக்கத்தில் இடைக்கால பட்ஜெட் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். மத்திய பட்ஜெட் தெரியும் இதுவென்ன இடைக்கால பட்ஜெட்?.

 

பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டிற்கு தேவையான நிதி, மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்போகும் நிதி மற்றும் முதலீடு செய்யப்போகும் தொகையின் விவரம், மேலும் கடந்த நிதியாண்டில் செலவிட்டதும், முதலீடு செய்ததன் மூலம் எவ்வளவு வருமானம் அரசுக்கு வந்திருக்கிறது என்பதையும் தெரிவிப்பதுதான் பட்ஜெட். இது கடந்த 2016-ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியன்று தாக்கல் செய்யப்பட்டுவந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு இந்த நடைமுறையை ஆளும் பாஜக அரசு மாற்றி அமைத்தது. 2017-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் முதல் முறையாக பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதன் பின் அதுவே வழக்கமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.   

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும், அவர்கள் என்ன வகையான திட்டங்களுக்கு மக்களின் பணத்தை செலவிடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு தனது ஆட்சிக்காலம் வரை மட்டும் மக்கள் நலத்திட்டத்திற்கும், மற்ற இதர செலவுகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்கி அதிலிருந்து அரசு செலவிடப்போகும் நிதி விவரங்களை தெரிவிப்பதே இடைக்கால பட்ஜெட். இதுபோன்ற சூழ்நிலையில் இரண்டு வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஒன்று இடைக்கால பட்ஜெட் மற்றொன்று செலவு அனுமதி கோரிக்கை (vote on account). 

 


ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் எந்தக் கட்சி ஆட்சியை அமைக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது. அதனால், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு அடுத்த ஆட்சியாளர் யாரென மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்த காலம் வரை செலவிடப்போகும் நிதி விவரங்களை தெரிவிக்கப்போகும் தற்காலிக பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட். எப்போதும் நிதி அமைச்சர் மத்திய பட்ஜெட் மற்றும் இடைக்கால பட்ஜெட் ஆகியவற்றை தாக்கல் செய்வார். அந்த வகையில் தற்போதைய நிதி அமைச்சரான அருண் ஜெட்லிதான் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். ஆனால், அவர் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் நிதித்துறையையும் கூடுதலாக கவணித்துவரும் இரயில்வேத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இந்த முறை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது.  

 

pp

 


இடைக்கால பட்ஜெட்:
 

இடைக்கால பட்ஜெட்டில் வருமானவரி குறித்த மாற்றங்கள், வரவு செலவு திட்டம், அரசின் சமீபகால செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் மற்றும் அரசின் தொலை நோக்குக் கொள்கைகள் ஆகியவை எதிர்பார்க்கலாம் அதனை அரசு கொண்டுவருவதற்கும் அனுமதியுண்டு. அதேசமயம் இதில் வருமானவரி விகிதத்தில் மட்டும் மாற்றம் கொண்டுவர அரசு கொஞ்சம் சிந்திக்கும். காரணம், இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரும் வருமானவரி மாற்றங்களை அடுத்து வரும் அரசு மாற்றி அமைக்க இடமுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டில் அவ்வளவு எளிதில் மாற்றங்களை அரசு கொண்டுவராது.  

 


செலவு அனுமதி கோரிக்கை (vote on account):
 

இது முற்றிலும் இடைக்கால பட்ஜெட்டில் இருந்து மாறுப்பட்டது. காரணம் இடைக்கால பட்ஜெட் என்பது பொது பட்ஜெட் போலவே தாக்கல் செய்யப்பட்டு நடைமுறைக்கு எளிதில் கொண்டுவந்துவிடலாம். ஆனால் இந்த செலவு அனுமதி கோரிக்கை என்பது அரசு கருவூலத்தில் இருக்கும் நிதியை செலவு செய்ய கோரிக்கை விடுவது. இது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால், நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதலும் பெற வேண்டும். அதே சமயம் செலவு அனுமதி கோரிக்கையின் மூலம் நிதி பெறும்போது, அரசு புதிய திட்டங்களையோ, புதிய வரி விதிப்பு முறையையோ அல்லது வரி குறைப்பு நடவடிக்கையையோ எடுக்க முடியாது. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு தேவையான நிதியை மட்டுமே பெற முடியும். அதனால் பெரும்பாலும் அரசு இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்யும்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்