பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி 2017-18 ஆண்டு இறுதி வரை பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துணர்வு கொடுக்க என்ன செய்யலாம், அல்லது நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராயுமாறு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக சில தினங்களுக்குமுன் தகவல் வெளியாகியிருந்தது.
மேலும் தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், நஷ்டத்தில் இருந்து நிறுவனத்தை மீட்டு புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம், நிறுவனத்தின் பங்கு முதலீடுகளை குறைக்கலாமா, அல்லது நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. அதில், அந்நிறுவனத்தின் 35,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.