மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான "பிஎஸ்என்எல்" (BSNL) நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இந்த நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க முடியாத அளவிற்கு நிதி நெருக்கடியில் உள்ளதால், லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதாலும், இதில் 'பிஎஸ்என்எல்' நிறுவனத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்காததுமே நஷ்டம் ஏற்பட காரணம் என 'பிஎஸ்என்எல்' ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஜூன் மாத ஊதியத்திற்கும், 'பிஎஸ்என்எல்' நிறுவனம் தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என 'பிஎஸ்என்எல்' நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் நிறுவனம் தொடர்ந்து நிலையாக இயங்க 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் நிறுவனங்கள் 5-ஜி சேவை வழங்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல் 3-ஜி சேவையை வழங்குவதால் பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களையும் கணிசமாக இழந்து வருகிறது.