முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலை வாங்கித்தருவது தொடர்பாக அவரை அணுகிய போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஊழியர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரஜ் ரேவண்ணாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, 342, 506 இன் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கடந்த 16 ஆம் தேதி (16.06.2024) ஹாசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகடா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த கைது சம்பவம் தொடர்பாக ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முகமது சுஜிதா கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும். எச்.டி ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்" என தெரிவித்துள்ளார்.