தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, துணி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையில்கொடுத்து உதவி வருகின்றனர் போபால் பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் பல வெளி மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள், எப்படியாவது தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைந்தால் போதும் என கருதி பல்வேறு ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல நூறு கிலோமீட்டர்கள் உணவு இன்றி, தங்க இடமின்றி குழந்தைகள், பெண்கள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவின் சாலைகளில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
பல்வேறு ஆபத்துகள் நிறைந்த இப்பயணங்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இப்படி சாலை மார்க்கமாக நடந்துசெல்லும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து உதவி வருகின்றனர், மத்தியப்பிரதேசத்தின் போபாலை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள காந்தி நகர் பகுதி வழியே செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செருப்பு, துணிகள், உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை அவ்வமைப்பினர் வழங்கி வருகின்றனர்.