பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில், எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
புதிதாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெண்களின் பின்னணி குறித்துப் பார்ப்போம்!
மத்திய அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ்:
மத்திய அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ் குஜராத்தில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்வானவர். குஜராத்தின் சமூகநல வாரிய உறுப்பினராக உள்ளார்.
மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி:
மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி புதுடெல்லியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.பி.யாக தேர்வானவர். இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், சமூகசேவகராகவும் உள்ளார்.
மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி:
மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து முதன்முறையாக எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் பிரதிமா பவுமிக்:
இவர் திரிபுரா பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், எளிய விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். முதல் முறையாக திரிபுரா மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.