சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று தொடங்கியுள்ளன. சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 223 பேர் வேட்பாளராகக் களத்தில் உள்ளனர். 20 தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மிஞ்சியுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் சுமார் 60,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் ஏற்கனவே அதிகப்படியான சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டம் தொண்டமார்கா பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.