இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் ஆந்திரப் பிரதேசம் (3 தொகுதி), பீகார் (6), சத்தீஸ்கர் (1), குஜராத் (4), ஹரியானா (1), ஹிமாச்சல பிரதேசம் (1), கர்நாடகா (4), மத்தியப் பிரதேசம் (5), மகாராஷ்டிரா (6), தெலுங்கானா (3), உத்தரப் பிரதேசம் (10), உத்தரகாண்ட் (1), மேற்கு வங்கம் (5), ஒடிசா (3), ராஜஸ்தான் (3) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர். அதே சமயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 இடங்களிலும், கர்நாடகா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடம் என மொத்தம் 15 இடங்களில் இன்று (27-02-24) தேர்தல் நடைபெற்றது.
அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் ஒரேயொரு இடத்திற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் தாக்கூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக அம்மாநில முதல்வர் சுக்வீர்சிங் சுகு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சி.ஆர்.பி.எப். வீரர்களும், ஹரியானா மாநில போலீசாரும் சேர்ந்து வாகனத்தில் கடத்திச் சென்று ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் அந்த இல்லம் மூடப்பட்டு உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாநிலங்களவை எம்.பி. தேர்தலின் போது தேர்தல் அலுவலர்களை பா.ஜ.க.வினர் மிரட்டினர். மேலும் இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க.வினர் சதி செய்கின்றனர்” எனப் புகார் தெரிவித்துள்ளார்.