இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
தற்பொழுது இறுதிக்கட்டமாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 3 தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. சந்திரயான் - 2ல் கற்ற பாடங்களை வைத்து தொழில்நுட்பப் பிழைகளை சீர் செய்து தற்போது சந்திரயான் - 3 நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான விஞ்ஞானிகள் முயற்சியில் நிலவின் மண்ணை சந்திரயான் - 3 இன்று தொட இருக்கிறது. உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சந்திரயான் - 3 வெற்றியில் நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு கிராமம் பங்களிப்பு கொடுத்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக உள்ளது.
சந்திரயான் - 3 தயாரிக்கும் பொழுது அவற்றை பரிசோதனை செய்ய இஸ்ரோவுக்கு நிலவில் தென் துருவத்தில் பகுதியில் உள்ள அனார்தசைட் எனும் பாறை வகை மண் தேவைப்பட்டது. இந்த வகையான மண் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் நிலையில் அங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்தது. இதனால் இஸ்ரோ இந்தியாவிலேயே இதுபோன்ற மண் வகை இங்கே கிடைக்குமா என்ற ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள குன்னைமலை பகுதியில் உள்ள பாறைகள் நிலவு மண்ணுடன் 99% ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாறைகளை வெட்டி சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அனார்தசைட் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திரயான்-3 ன் லேண்டரும், ரோவரும் இறங்கிப் பழகி பயிற்சி எடுத்தன.