பீகார் தேர்தலில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவேண்டும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "முதலில் பீகார் மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த தேர்தல் மகாகத்பந்தனுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தது. முதல் முறையாக இப்படி நடக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் மகாகத்பந்தன் உருவானபோது, எங்களுக்கு ஆதரவாகதான் மக்கள் இருந்தார்கள். ஆனால் பாஜக புறவாயில் வழியாக நுழைந்து அதிகாரத்தை பெற்றது. பீகார் தேர்தலில் இறுதியாக எண்ணப்பட்ட அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். ஏனெனில், மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே 20 இடங்களை நாங்கள் இழந்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.