ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. அங்கு பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது. அதுமட்டும் இல்லாமல் நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது.
இதற்கிடையில் ஆறு மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பல மாநில அரசியல் கட்சித் தலைவர்களும், வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஷேவிங் செய்ய உதவும் ரேசரை அமேசானில் உமர் அப்துல்லாவிற்கு ஆர்டர் செய்து அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக, "ஊழல் செய்த கூட்டாளிகள் எல்லாம் வெளியே இருக்கும் போது உமர் மட்டும் இப்படி இருப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் காங்கிரஸ் நண்பர்களை அணுகுங்கள்" என பதிவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படத்தியதை அடுத்து தமிழக பாஜக இந்த ட்வீட்டை நீக்கியுள்ளது.
குடியரசு தினத்தன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியலைப்பு சட்ட புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து, குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறி அந்த புத்தகத்தை பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.