டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே இருக்கிறார். இரண்டாவது முறையாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, நீர்வளத்துறை அமைச்சராக இருந்த அதிஷியை அடுத்த டெல்லி முதல்வராக முன்மொழிந்தார். அதன்படி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் டெல்லி முதல்வராக அதிஷி பொறுப்பு வகித்து வருகிறார். 70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்ற்த் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மிக்கு எதிராக ஊழல் குற்றப்பத்திரிக்கையை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் இந்த குற்றப்பத்திரிகையை வெளியிட்ட பிறகு, பா.ஜ.க எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் இன்று (23-12-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த குற்றப்பத்திரிகை, ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல் தொடர்புடையது. டெல்லி வாழும் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். மருத்துவம், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம் என்று அவர் கூறினார். ஆனால், டெல்லி மக்கள் இன்னும் அந்த சேவைகளுக்கு பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியை ஊழலில் இருந்து விடுவிப்போம் என்று அவர் கூறினார். ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் மற்றும் 15 எம்.எல்.ஏக்கள் சிறையில் இருக்கின்றனர்.
கெஜ்ரிவால், நீங்கள் நம்பர் 1 என்று அடிக்கடி கூறுகிறீர்கள். எந்த துறையில் நீங்கள் நம்பர் 1ஆக இருக்கிறீர்கள்?. இந்த நாட்டில், விலை உயர்ந்த தண்ணீரை உங்கள் அரசு வழங்குகிறது. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஊழல் அமைச்சர்களில் அதிக பேர் டெல்லியில் இருக்கிறார்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்பத் சிங் பன்னுன்-யின் நீதிக்கான சீக்கியர்களின் இயக்கத்திடம் இருந்து 1.6 மில்லியன் டாலர் பணத்தை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. இதை பன்னுனுடம் ஒப்புக்கொண்டுள்ளர். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவை ஆம் ஆத்மி பெற்றிருந்தது. சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்களுக்கு ஆம் ஆத்மி பாதுகாப்பு அளிக்கிறது.
காங்கிரஸிடம் இருந்து ஆதரவைப் பெறமாட்டேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஆனால், அதை அவர் செய்தார். அவர் பங்களாவை எடுக்க மாட்டேன் என்று கூறினார், ஆனால் ஆடம்பரமான ஒன்றை உருவாக்கினார். அவர் கார் எடுக்க மாட்டேன் என்று கூறினார், மிகவும் விலையுயர்ந்த ஒன்றை எடுத்தார். இந்த குற்றப்பத்திரிகை டெல்லியைச் சேர்ந்த கெஜ்ரிவாலின் குற்றப் பதிவை அம்பலப்படுத்தும்” என்று கூறினார்.