இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் பணியின் வேகம் மும்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் அரசு சாதனை குறித்தும் தனது ஒரு மணி நேர உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விவரித்து பேசினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு கருத்து தெரிவித்த சோனியா காந்தி எம்,பி, “ஜனாதிபதி இறுதியில் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை, பாவம்” என்று கூறினார். மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தி, ஜனாதிபதி குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரை சோனியா காந்தி அவமதிப்பதாகக் கூறி பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது. ஆனால், ஜனாதிபதி மீது சோனியா காந்தி மிகுந்த வைத்துள்ளார் என்றும், அவரை அவமதிக்கும் வகையில் சோனியா காந்தி எதுவும் பேசவில்லை என்றும், வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியின பா.ஜ.க எம்.பிக்கள் நேற்று மாநிலங்களவைத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, சோனியா காந்திக்கு எதிராக அவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நோட்டீஸ் கொடுத்தனர். அதே போல், ஜனாதிபதி உரையை காதல் கடிதம் என்று கூறிய சுயேட்சை எம்.பி பப்பு யாதவ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்.