
கரூர் மாவட்டம் நேரூர் என்ற கிராமத்தில் சத்குரு சதாசிவ சபா உள்ளது. இந்த சபாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது. அந்த நாளில் உணவு சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பில் எச்சில் இலைகளில் படுத்து உருளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு கடந்தாண்டு மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பக்தர்கள் வழிபாட்டு முறையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பின்பற்றி இந்த விழாவும் நடத்தப்பட்டது. இந்த விழா நடத்தப்பட்ட பின்பு சர்ச்சையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பிலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீடித்து வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் இன்று (13-03-25) தீர்ப்பளித்துள்ளனர். அதில், ‘அங்கப்பிரதட்சணை வழிபாட்டு முறையாக இருந்தாலும், பக்தர்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. மேலும், எச்சில் இலையில் உருளுவது மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழ்நிலையில், எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் வழிபாட்டு முறையை அனுமதிக்க முடியாது. எனவே, எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.