உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வரும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். அத்துடன் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருக்கும் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதும் வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண்சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இதையொட்டி போராட்டம் நடத்திய நிலையில், மத்திய அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டது. ஆனால், பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 23 ஆம் தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தபோது, உடனடியாக வீராங்கனைகளின் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை உறுதியளித்தது. இந்த நிலையில் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண்சிங் டெல்லி போலீஸ் போக்சோ வழக்கு உட்பட இரு வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ்பூஷண் சரண்சிங், “நான் அப்பாவி. விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதற்காக முழு ஒத்துழைப்பு தருகிறேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நான் மதிக்கிறேன்” என்றார்.