உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்காவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக மீட்டு வருகின்றனர் வெளிநாட்டு தூதரகங்கள்.
அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானம் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. மேலும், இரவு, பகல் பாராமல் வெளியுறவுத்துறை அதிகாரிகள், உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக, மால்டோவா, ஹங்கேரி வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இன்று (27/02/2022) தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர். அப்போது, ஹங்கேரி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம், இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல், உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்தியர்களை மால்டோவாவிற்குள் அனுமதிக்க அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையேற்ற மால்டோவாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், இந்திய மாணவர்களுக்கு உரிய உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின், வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு நாளை (28/02/2022) மால்டோவா செல்கிறது.
உக்ரைனில் இருந்து வரும் இந்திய மாணவர்களுக்கு விசா தேவையில்லை என்று போலந்து தூதர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யா விமானங்களுக்கு தடை விதித்தது இத்தாலி. வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.