Skip to main content

மம்தாவை சந்திக்க சென்ற பாஜக தலைவர்கள்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

bjp leaders

 

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கு இடையே நேரடியான போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலையொட்டி மம்தா, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நேற்று (10.03.2021) வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

இந்தநிலையில் நேற்று மாலை, போலீஸார் அருகில் இல்லாதபோது 4 - 5 பேர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார் மம்தா. தொடர்ந்து வலியால் துடித்த அவர், ‘இது ஒரு திட்டமிடப்பட்ட சதி’ என குற்றஞ்சாட்டினார். இதன்பிறகு மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மம்தாவின் கால், கை, கழுத்து பகுதி எலும்புகளில் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் 48 மணிநேரத்திற்கு கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்த தாக்குதல் தொடர்பாக, மம்தாவின் மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி பாஜகவை குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரம் பாஜக, ‘இது ஒரு நாடகம்’ என குற்றம்சாட்டியது. இந்தநிலையில் பாஜக மூத்த தலைவர்களான ததகதா ராய், ஷாமிக் பட்டாச்சார்யா ஆகியோர் மம்தாவை சந்திக்க, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். இருப்பினும் மம்தாவை சந்திக்க அவர்களுக்கு மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. இதனையடுத்து அங்கிருந்த திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர் அரூப் விஸ்வாஸை சந்தித்து மம்தாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

மம்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு, தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்