வங்கி கடன்களைத் திருப்பி செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் வங்கியில் வாங்கி கடன்களுக்கான மாத தவணைகளை ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை செலுத்த தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஒரு சில வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதாகவும், அதனை ரத்து செய்யக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (26/08/2020) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'வங்கி கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். வட்டிக்கு வட்டி வசூல் ரிசர்வ் வங்கியின் முடிவு எனக்கூறி மத்திய அரசு தப்பித்து கொள்கிறது. நீங்கள் அறிவித்த பொது முடக்க உத்தரவால்தான் இந்த பிரச்சனையே ஏற்பட்டது. உங்களது பணியை செய்யும் நேரம் இதுவல்ல; தேவையான நிவாரணத்தை வழங்குவதும் அவசியம்' என கூறிய நீதிபதிகள், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
வங்கி கடன் வழக்கில் ஒருவாரத்தில் தெளிவான விளக்கத்தை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.