Skip to main content

சித்தராமையா மீது பா.ஜ.க பகிரங்க குற்றச்சாட்டு - என்.ஐ.ஏ விசாரிக்க வலியுறுத்தல்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

BJP blames Siddaramaiah; insists on NIA investigation

 

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹூப்பள்ளியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தென்னிந்திய இஸ்லாமிய மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, அந்த மேடையில் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா ஐஎஸ் ஆதரவாளர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கருத்து தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “முதல்வர் சித்தராமையா ஹூப்பள்ளியில் நடந்த மாநாட்டில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். தன்வீர் பீரா ஒரு பயங்கரவாத அனுதாபி. அவர் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பைக் கொண்டவர்” என்று கூறினார். இதனை மேற்கோள் காட்டி இந்த விவகாரத்தை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க,வின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கோரிக்கை வைத்துள்ளார்.

 

மங்களூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவேந்தல் கூட்டம் நேற்று (06-12-23) நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஹூப்பள்ளியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் ஐஎஸ் ஏஜெண்டு கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடைய நபருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். ஒரு அரசு நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub