கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களாக சோனு சூட் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதனைத்தொடர்ந்து இந்த சோதனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய நேரடி வரிகள் வாரியம், "மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகருக்கு சொந்தமான இடங்களிலும், லக்னோவைச் சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராம் ஆகிய பகுதிகளில் உள்ள 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என தெரிவித்தது. மேலும், 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த மத்திய நேரடி வரிகள் வாரியம், சோனு சூட் போலியான நிறுவனங்களிடமிருந்து போலியாக கடன் வாங்கி, கணக்கில் வராத சொத்தை சேர்த்துள்ளதாகவும் கூறியது.
இந்தநிலையில், வருமான வரித்துறையின் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் சோனு சூட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், "உங்கள் தரப்பினை நீங்கள் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதற்கான நேரம் வரும். இந்திய மக்களுக்கு சேவை செய்ய நான் எனது முழு வலிமையுடனும் இதயப்பூர்வமாகவும் உறுதியெடுத்துள்ளேன். எனது அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் ஒரு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றுவதற்கும், தேவையுள்ளவர்களைச் சென்றடைவதற்கும் காத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "பல சமயங்களில், எனது விளம்பர கட்டணத்தை மனிதாபிமான காரணங்களுக்காக நன்கொடையாக வழங்க நிறுவனங்களை ஊக்குவித்தேன்" என தெரிவித்துள்ளதோடு, "சில விருந்தினர்களைச் சந்திப்பதில் மும்முரமாக இருந்ததால், கடந்த நான்கு நாட்களாக உங்களுக்கான சேவையை தொடர முடியவில்லை. இப்போது நான் தாழ்மையுடன் திரும்பி வந்துள்ளேன். உங்களுக்கான சேவையில் வாழ்நாள் முழுவதும் இருப்பேன்" எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.