
கர்நாடகாவில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு கடந்த 2022 - 2023 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் வரலாறு புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் பலராம் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றிருந்தன. அதே சமயம் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், கேரளாவைச் சேர்ந்த நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் குறித்த தகவல்களும், சமுதாய முன்னேற்றத்துக்கான இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களின் கதை மற்றும் கவிதைகளும் நீக்கப்பட்டன. இந்த செயல் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி 2024 - 2025 கல்வியாண்டுக்கான பாடத் திட்டங்களை கர்நாடக காங்கிரஸ் அரசு மாற்றம் செய்துள்ளது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழிப் பாடங்களில் முற்போக்கு தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 10 ஆம் வகுப்பு வரலாறு பாடத் திட்டத்தில், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, சமூகப் பணிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சாவித்ரிபாய் பூலே, திப்பு சுல்தான், பசவண்ணர், விஸ்வேவரய்யா ஆகியோரின் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளன.