டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கடந்த 28ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பான சோர்ன் சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ஜார்கண்ட் முதல்வாக இருந்த் ஹேமந்த் சோரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பாஜக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகத்தான் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் தான் சுனிதா கெஜ்ரிவாலை கல்பனா சோரன் சந்தித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், “ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ, அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். துயரத்தை பகிர்ந்துகொண்டேன். நாங்கள் இருவரும் எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்" எனத் தெரிவித்தார்.