பீகார் மாநிலம் ககரியா மாவட்டம் பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கிக் கணக்கில், கிராம வங்கி தவறுதலாக 5.5 லட்ச ரூபாயைத் செலுத்தியுள்ளது. இவ்வாறு தவறுதலாகச் செலுத்தப்பட்ட பணத்தை ரஞ்சித் தாஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்தும் விட்டார்.
இதனையடுத்து சம்மந்தப்பட்ட வங்கி, தொடர்ந்து ரஞ்சித் தாஸுக்கு பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் பணத்தைத் திரும்பிச் செலுத்தவில்லை. இதனையடுத்து அவர் மீது வங்கி காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம், பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி தனது வங்கியில் செலுத்தப்பட்டதாக நினைத்ததாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணத்தை பெற்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் செலுத்துவதாக உறுதியளித்திருந்ததால், இது அதன் முதல் தவணையாக இருக்கலாம் என்று நினைத்தேன். பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கிக் கணக்கில் தற்போது பணமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் தாஸிடம் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் சொன்ன காரணத்தை இணையவாசிகள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.