அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 196 வேட்பாளர்களும், அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகவும், அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்தபடி வாக்களித்து வருகின்றனர். கரோனா பாதித்தவர்கள் கடைசி நேரத்தில் வாக்களிக்க ஏதுவாக ஒருமணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் நடந்துவரும் மேற்கு வங்கத்தில் பகவான்பூர் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கும் முன்பு, வாக்காளர்களை சிலர் அச்சுறுத்த முயன்றதாக புகார் எழுந்தது. அச்சுறுத்த முயன்றவர்களைத் தடுத்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்கள் காயமடைந்தனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருடன் சிலர் சேர்ந்து வாக்காளர்களை அச்சுறுத்தியதாக பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.