பீகாரில் வெள்ள பாதிப்புகள்: உயிரிழப்பு எண்ணிக்கை 253-ஆக உயர்வு!
கடந்த சில தினங்களாக பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 253 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருகோடிக்கும் மேலானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
பீகாரில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சிக்கி 253 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1.26 கோடி பேர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,539 மையங்களில் 5 லட்சம் மக்களுக்கான உணவு தயாரிப்புப் பணிகளை மாநில அரசு எடுத்துவருகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் இராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 7 லட்சத்திற்கும் மேலானோர் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் அனாரியா மாவட்டத்தில் இதுவரை 57 பேர் மழைவெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சில மாவட்டங்களும் கண்காணிப்பின் கீழ் உள்ளன. உணவுப்பொட்டலங்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மக்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தர அரசு துணைநிற்கும். மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை பிரச்சனைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதியைப் பெற எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்