பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்த்த இந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியது.
இதில், பா.ஜ.க கூட்டணி 125 இடங்களிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 110 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து நேற்று அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். இந்நிலையில், தற்போது முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், ஆர்.ஜே.டி நூலிழையில் வெற்றிவாய்ப்பை தவறவிட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. இதில், பா.ஜ.க கூட்டணி 37.26 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆர்.ஜே.டி கூட்டணி 37.23 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 0.03 சதவீத வாக்குகள் தான் பீகாரின் புதிய முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளது என்பதை அறியலாம்.