வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 85% பகுதி நீரில் முழ்கியுள்ளது. அதே போல் உலக புகழ் பெற்ற காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயம் முழுவதும் நீரில் முழ்கியுள்ளதால், வனவிலங்குகளை காப்பாற்றும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன. அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சுமார் 85 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பீகார் மாநிலத்தில் மட்டும் 50 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இது வரை சுமார் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் வெள்ளம் வந்த சமயத்தில், அந்த மாநில துணை முதல்வர் சுசில் குமார் மோடி தியேட்டரில் "ஹாயாக" அமர்ந்து சூப்பர் 30 திரைப்படத்தை பார்த்தது, பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல், தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதா? என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் துணை முதல்வரின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தியேட்டரில் படம் பார்த்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, துணை முதல்வர் சுசில்குமார் மோடி, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும் என அவர் தனது செயலை நியாயப்படுத்தி பேசினார். மேலும், வெள்ளம் பாதித்த மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருவதாக அவர் விளக்கமளித்திருந்தாலும், சுஷில் மோடியின் செயலை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இவர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகாரில் ஜனதா தள கட்சித்தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.